விவசாயிகள் திட்டத்தின் ரூ.110 கோடி ஊழலில் அதிமுகவினருக்கு தொடர்பு.. கனிமொழி குற்றச்சாட்டு..

மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி சுருட்டப்பட்ட விவகாரத்தில் அதிமுக முக்கிய தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்குக் குறைவாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த தொகை நேரடியாகச் செலுத்தப்படும். ஆனால், அந்த விவசாயிகளின் நில ஆவணங்களைப் பரிசோதித்துச் சரியான ஆட்களைத் தேர்வு செய்து ஒப்புதல் அளிக்கும் பணி, தமிழக அரசிடம் உள்ளது. ஆரம்பத்தில் இந்தப் பணியை வருவாய்த் துறையில் உள்ள வி.ஏ.ஓ.க்கள் செய்து வந்தனர்.

ஆனால், அதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி, மாநில அரசின் வேளாண்மைத் துறையிடமும் பணியை ஒப்படைத்தனர். இந்நிலையில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த திட்டத்தில் விவசாயிகள் என்ற பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கி, பணம் சுருட்டப்பட்டது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது வரை ரூ.110 கோடி இப்படி போலி ஆசாமிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதாகவும், அவற்றை மீட்டு வருவதாகவும் மாநில அரசின் வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மோசடி செய்தவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திரும்பப் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த ஊழலில் அதிமுக முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பு உள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொது முடக்கக் காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத் தானா? 5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

More News >>