பாட்டியின் உயிரை காப்பாற்ற பென்ஸ் காரை எடுத்து பறந்த 11 வயது பேரன்
தனது பாட்டியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக 11 வயது சிறுவன் வீட்டில் இருந்த பென்ஸ் காரை எடுத்து மருத்துவமனைக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவிலுள்ள இண்டியானா போலிஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஏஞ்சலா ப்ரூவர்(62). சம்பவத்தன்று வீட்டில் இவரும், இவரது 11 வயதான பேரன் பிஜே ப்ரூவரும் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஏஞ்சலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை குறைபாடு நோய் இருந்தது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென ஏஞ்சலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை குறைந்து மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லா விட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.ஆனால் உதவிக்குப் பேரன் ப்ரூவரை தவிர வேறு யாருமில்லை. பாட்டி சிரமப்படுவதைப் பார்த்த ப்ரூவர் உடனடியாக ஓடிச்சென்று வீட்டில் இருந்த பென்ஸ் கார் சாவியை எடுத்தான். பின்னர் காரில் பாட்டியை அமர்த்திவிட்டு காரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றான். பேரன் கார் ஓட்டுவதை ஏஞ்சலா தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
சிறிது நேரத்திலேயே அந்த சிறுவன் பாட்டியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான். உடனடியாக டாக்டர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்தனர். நலமாகி வீட்டுக்கு வந்த பின்னர் ஏஞ்சலா தனது பேரன் தன்னை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்ற வீடியோவை சமூக இணையதளங்களில் பகிர்ந்தார். இதைப் பலர் பாராட்டினாலும் 11 வயது சிறுவன் கார் ஓட்டியதைச் சிலர் கண்டிக்கவும் தவறவில்லை. தனது பேரன் இல்லாவிட்டால் தன்னை இப்போது உயிருடன் பார்த்திருக்க முடியாது என்று கண்ணீர் மல்க ஏஞ்சலா கூறினார்.