திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது.. அமைச்சர் உதயகுமார் பேட்டி..

எட்டு மாதங்கள் அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.மதுரை வேளாண் கல்லூரியில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டக் கலெக்டர் வினய், வேளாண்மை கல்லூரி முதல்வர் பால் பாண்டி, வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், தோட்டக்கலை இயக்குனர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்பின்னர், அமைச்சர் உதயகுமார், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலின் பேசியிருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:-எட்டு மாதங்கள் இல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது. மக்கள் தேவைகளை அறிந்து, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வகுத்துப் பாதுகாக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் அதைச் செய்யவில்லை. ஆதிகாலத்தில் உள்ளது போலவே திமுக இப்போதும் செயல்பட்டு வருகிறது. திமுக கட்சியே பின்தங்கி மங்கிப் போய் உள்ளது. சட்டசபைத் தேர்தல் 8 மாதத்துக்குள் வரும். அந்த தேர்தலில் அதிமுகவிற்கு மீண்டும் வெற்றி கிடைப்பது உறுதியாகும்.

திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியபோது, கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். கடந்த 5 மாதங்களாக மக்களுக்காக அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை என்று ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.அதே சமயம், முதல்வரும், துணை முதல்வரும் இந்தத் தொற்றுநோய் காலத்திலும் கடுமையாக உழைத்து மக்களுக்குத் தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, நோய் பாதித்தவர்களில் 85 சதவீதம் பேரைக் குணப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

More News >>