சர்வதேச பட விழாவில் திரையிட பண மதிப்பிழப்பு பற்றிய தமிழ் படம் தேர்வு..
2016ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுக்கள் பணமதிப்பு இழப்பை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட கற்பனை கலந்த திரைப்படம் “தட்றோம் தூக்றோம்”மீடியா மார்ஷல் தயாரித்த தட்றோம் தூக்றோம் என்ற இப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த தீ ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகப் புதுமுக நாயகி பௌசி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சீனு மோகன், காளி வெங்கட், லிங்கா, மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கபிலன் வைரமுத்து வசனம் பாடல்கள் எழுதப் புதுமுக இயக்குநர் அருள் .எஸ். இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு பாலமுரளி பாலு இசை அமைக்க சிலம்பரசன் படத்தின் மிக முக்கியமான கபிலன் வைரமுத்து எழுதிய பணமதிப்பிழப்பு பாடலை பாடியுள்ளார்.படத்தின் டிரெய்லர் ஏற்கனவே இணைய தளத்தில் வெளியிடப்பட்டு பத்து லட்சம் பார்வையாளர்களுக்குக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. படம் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,இந்த கொரோனா நேரத்தில் இந்த படம் டொராண்டோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தி படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
இந்த பட விழாவில் தேர்ந்தெடுத்ததற்கு டொராண்டோ சர்வதேச தமிழ்த் திரைப் பட விழாக் குழுவினருக்கும் மற்றும் அனைவருக்கும் மீடியா மார்ஷல் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தட்றோம் தூக்றோம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப் பட உள்ளது.