காதலர்களுக்கு செருப்பு மாலை கவுன்சிலர் உள்பட 12 பேர் கைது

லக்னோவில் காதலர்கள் முகத்தில் கரியைப் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவர்களை ஊர்வலமாகக் கொண்டு சென்ற சம்பவத்தில் கவுன்சிலர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள குஷிநகர் மாவட்டத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்தது. இப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும் இந்த காதலுக்குப் பெண்ணின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி இருவரும் பலமுறை ரகசியமாகச் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு யாருக்கும் தெரியாமல் அந்த காதலன் தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டின் பின்புறம் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். வீட்டுக்குள் மகளைக் காணாததால் அந்த இளம் பெண்ணின் தாய் தேடியபோது இருவரும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை இளம்பெண்ணின் வீட்டினர் பிடித்து அந்த வீட்டிலேயே ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

மறுநாள் காலை அந்த பகுதி கவுன்சிலரிடம் பெண்ணின் வீட்டினர் விவரத்தைக் கூறினர். இதையடுத்து அந்த கவுன்சிலரின் முன்னிலையில் இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்து, முகத்தில் கரியைப் பூசி அந்த தெரு வழியாக நடக்க வைத்தனர். இந்த வீடியோவை யாரோ எடுத்து சமூக இணைய தளங்களில் பகிர்ந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வார்டு கவுன்சிலர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

More News >>