ஹர்பஜன் சிங்கிடம் ரூ.4 கோடி அபேஸ் செய்த சென்னை தொழிலதிபர்?!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பௌலருமான ஹர்பஜன் சிங்கை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஏமாற்றிய சம்பவம் தற்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது. ஹர்பஜன் இது தொடர்பாகச் சென்னை மாநகர போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், ``சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் எனக்கு அறிமுகமானார். அவர் தொழிலைப் பெரிதுபடுத்தப்போவதாகக் கூறி என்னிடம் ரூ.4 கோடி 2015ல் கடனாக வாங்கினார். கடன் வாங்கிய பின் அவரை காணவில்லை.
அவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதற்கிடையே, சில வருடங்களுக்குக் கடந்த ஆகஸ்ட் 18ல் எனக்கு 25 லட்ச ரூபாய்க்கான செக் கொடுத்தார். ஆனால் அந்த செக்கும் பவுன்ஸ் ஆகிவிட்டது. அவரிடம் இருந்து என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்" என்று புகார் கொடுத்தார். ஹர்பஜனின் புகாரை, சென்னை நீலாங்கரை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரையா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவரோ, தனது வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.