தற்கொலைக்கு தயாராகும் போட்டோவை மனைவிக்கு அனுப்பி தூக்கு போட்ட வாலிபர்

கொரோனா முகாமில் இருந்த வாலிபர் தற்கொலைக்குத் தயாராகும் புகைப்படத்தை மனைவிக்கு செல்போனில் அனுப்பித் தூக்குப்போட்டு இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள ரான்னி என்ற இடத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (41). இவர் பெங்களூருவில் ஒரு பூக்கடையில் பணிபுரிந்து வந்தார். இரண்டு நாள் முன் இவர் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து அவர் அங்குள்ள அரசு கொரோனா முகாமில் அனுமதிக்கப்பட்டார்.

நிஷாந்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொரோனா முகாமில் இருந்ததால் அவரால் மது குடிக்க முடியவில்லை. இதனால் நேற்று இரவு இவர் முகாமில் கடும் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவர் முகாமில் உள்ள ஒரு மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் தூக்குப் போடுவதற்கு முன்பாக மின்விசிறியில் தூக்கு மாட்டும் புகைப்படத்தைத் தனது செல்போனில் எடுத்து மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார். இதைப் பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் செல்வதற்குள் நிஷாந்த் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பத்தனம்திட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நிஷாந்த் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

More News >>