கடத்தவில்லை.. அருணாச்சல பிரதேச இளைஞர்கள் விவகாரத்தில் திடீர் டுவிஸ்ட்!
இந்தியச் சீன எல்லை பிரச்சனை உக்கிரமாக இருந்து வரும் இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அருணாச்சல பிரதேச மாநிலம் உப்பர் சுபான்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியது. அவர்களைச் சீன ராணுவத்தினர் கடத்திச் சென்றதாகத் தகவல் வெளியானதால் எல்லை பிரச்சனை மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது. இது தொடர்பாகக் கண்டங்கள் வார்த்தை மோதல்கள் உருவாகத் தொடங்கின. இந்நிலையில் தான், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு, இந்த விவகாரம் தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், ``காணாமல் போன இளைஞர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சீனா உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்குச் சீனா ராணுவம் பதிலளித்துள்ளது. மேலும் 5 இளைஞர்களும் வழிதவறிச் சீன பகுதிக்குள் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார். இதனை இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தனும் உறுதிப்படுத்தியுள்ளார். ``5 இளைஞர்கள் இருக்கும் இடம் குறித்து இன்று சீன ராணுவத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை அழைத்து வருவதற்கான செயல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.