உடல் அசதி நீங்கும். முதுமை அண்டாது. கண்களுக்குத் தெளிவு பிறக்கும் - எள்ளின் மருத்துவ பலன்கள்
'நல்லெண்ணெய்' - இதன் மூலப்பொருள் எள் ஆகும். எள்ளும், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயும் நம் உடலுக்கு அதிக நன்மை செய்பவையாகும்.
எள்ளில் அடங்கியுள்ள சத்துகள்
100 கிராம் உலர்ந்த கறுப்பு எள்ளில் 29 சதவீதம் கலோரி, 18 சதவீதம் கார்போஹைடிரேடு, 32 புரதம், 166 சதவீதம் கொழுப்பு, 31 சதவீதம் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களான ஃபோலேட் 25 சதவீதம், நியாசின் 28 சதவீதம், ரிபோஃப்ளோவின் 19 சதவீதம், தயாமின் 66 சதவீதம், பொட்டாசியம் 10 சதவீதம், கால்சியம் 98 சதவீதம் அடங்கியுள்ளது. மேலும் செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், தாது, வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவைகளும் அதிகம் அடங்கியுள்ளன.
எள்ளின் பயன்கள்
நல்லெண் ணெயை கொண்டு நன்றாக வாய் கொப்பளித்தால் பற்களில் படிந்துள்ள காரைகள் அகலும். வாய் ஆரோக்கியம் பெறும்.எள்ளில் அதிக கொழுப்பு உள்ளது. ஒமேகா-6 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இவை தவிர நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது.கறுப்பு எள்ளுக்கு மலச்சிக்கலைப் போக்கும் பண்பு உண்டு. எள்ளில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்தும், கொழுப்பு அமிலமும் குடலுக்கு உயவு தன்மை அளித்து மலம் கழிய உதவும்.
காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும்.சொறி, சிரங்கு தொல்லை உள்ளவர்கள் எள்ளை அரைத்துப் பூசினால் சரும நோய்கள் அகலும்.கறுப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையைக் குணப்படுத்தும்.எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
நல்லெண்ணெயில் டைரோசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. நரம்பியல் கடத்தியான செரோடோனினை பொறுத்தே நம் மனநிலை மாறுபடுகிறது. செரோடோனின் சமநிலை தவறும்போது மனச்சோர்வும், மன அழுத்தமும் உண்டாகிறது. நல்லெண்ணெயிலுள்ள டைரோசின், செரோடோனினுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும். ஆகவே, நல்லெண்ணெய் பயன்படுத்துவது மன அழுத்தத்தைப் போக்க நல்ல வழியாகும்.
எள்ளில் இருக்கும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பைத் தடுக்கிறது. இதில் உள்ள பூரித கொழுப்பு இரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.எள் செடியின் இலையையும் வேரையும் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் நிற்கும்.
எள் பொடி :
எள், கடலை பருப்பு, வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம், தோலுடன் பூண்டு இவற்றைப் பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டால் சுவையுடன் ஆரோக்கியம் உண்டாகும்.
எள் துவையல் :
எள், புளி, வற்றல், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை வறுத்து பசைபோல் அரைத்துத் துவையலாகப் பயன்படுத்தலாம். பச்சரிசி, நிலக்கடலை, எள் வறுத்து, கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உருண்டையாக உருட்டிச் சாப்பிட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் நீங்கும்.
எண்ணெய் குளியல்
நல்லெண்ணெய்யை இளஞ்சூடாக்கி தலைக்கும், உடலுக்கும் மிகவும் அழுத்தம் இன்றி 5 முதல் 10 நிமிடங்கள் தேய்த்து சிறிது நேரம் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும்.இதனால் உடல் அசதி நீங்கும். முதுமை அண்டாது. கண்களுக்குத் தெளிவு பிறக்கும். உடல் பூரிப்படையும் (பருமனாகும்). ஆயுளை வளர்க்கும். தூக்கம் உண்டாகும். சருமத்தை மென்மையாக்கும்.