சென்னை என்மீது நம்பிக்கை வைத்தது.. தோனி குறித்து நெகிழ்ந்த ஷேன் வாட்சன்!

மூன்றாம் ஆண்டாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்க இருக்கும் ஷேன் வாட்சன், சென்னை அணி குறித்த தனது நெகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ``2018 ஐபிஎல் சீசன் எனக்குச் சிறப்பாக அமைந்தது. அந்த ஆண்டில் இறுதிப்போட்டியில் சதம் அடித்தது மறக்க முடியாதது. ஆனால் அடுத்த ஆண்டு மற்ற அணிகள் என்னை எடுக்கத் தயங்கிய நிலையில் சென்னை என்னை மீண்டும் தக்க வைத்தது. கடந்த ஆண்டு சீசனில், முதல் 11 வது போட்டி வரை ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்தான் அரைசதம் அடித்தேன். 11 போட்டிகளிலும் சரியாக விளையாடாத என்னை சிஎஸ்கே காத்தது. இதுவே மற்ற அணியாக இருந்தால் சரியாக விளையாடாததற்கு என்னை அணியிலிருந்து விலக்கி இருப்பார்கள். ஆனால் சென்னை அணி அப்படிச் செய்யவில்லை.

மாறாக என்மீது நம்பிக்கை வைத்தார்கள். ஒரு வீரர் மீது இப்படியான உறுதியான நம்பிக்கை வைப்பது எல்லாம் உலகத்தரம் வாய்ந்த கேப்டன்கள் மட்டுமே முடியும். நிச்சயம் தோனி உலகத்தரம் வாய்ந்த கேப்டன். அணியைச் சிறப்பாகக் கொண்டு செல்ல தோனி மற்றும் ஃப்ளெமிங் சிறப்பான அணுகுமுறையைக் கையாள்கிறார்கள்.

உங்களை யாராவது நம்பினால் அதைக் காட்ட நேர்மையாக இருக்க வேண்டும். என்மீது வைத்த நம்பிக்கைக்கு நேர்மையாக இருந்தேன். மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் நான் ரன் அவுட் ஆனேன், ஆனால் அதுவரை, என்னால் முடிந்த பங்கினை நான் அணிக்கு வழங்கினேன். தொடர்ந்து வழங்குவேன். சென்னை அணிக்காக விளையாடியதற்காக நான் ஒரு அதிர்ஷ்டசாலி" என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

வாட்சன் 2018ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து விளையாடிய போது சென்னை அணிக்காக விளையாடிய வாட்சன் முழங்கால் காயத்தால் ரத்தம் வழிந்ததையும் பொருட்படுத்தாமல் அணியின் வெற்றிக்காக வாட்சன் போராடிய காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More News >>