Su30MKI தான் என் விருப்பம்... ரபேலுக்கு தல தோனியின் வாழ்த்து!
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. இந்த போர் விமானங்களை முறைப்படி விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.
சில மாதங்களுக்கு முன்பு, முதல் விமானத்தை வாங்குவதற்காக பிரான்ஸ் சென்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விமானத்திற்குப் பொட்டு வைத்து, எலுமிச்சை பழம் வைத்து பூஜை நடத்தினார்.அதே போல், இன்றும் பூஜைகள் நடத்தி அதன்பிறகு விமானங்கள் படையில் சேர்க்கப்பட்டன. பின்னர் ரபேல் விமானங்கள் மற்றும் தேஜஸ் விமானங்கள் வானில் சாகசங்கள் நிகழ்த்தின.
அப்போது ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், முறைப்படி ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான ஆவணத்தை விமானப்படையின் 17 படைப்பிரிவின் 'தங்க அம்புகள்' குழு கட்டளை அதிகாரி கேப்டன் ஹர்கீரத் சிங்கிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
இதற்கிடையே, ரபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதற்கு, தல தோனி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ``உலகின் சிறந்த போர் விமானம் என்று பெயர் பெற்ற ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் விழா நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற 17 படைப்பிரிவான கோல்டன் அம்புகள் படைக்கு எனது வாழ்த்துக்கள். ரபேல் மிராஜ் 2000-ன் சேவை சாதனையை முறியடிக்கும் என்று நம்புகிறோம். ஆனால் Su30MKI என் விருப்பம்" என்று கூறியுள்ளார்.