அரசின் புதிய திட்டத்தால் குழந்தைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
தேசிய சிறார் உழைப்பு அகற்றல் திட்டம்:
சிறார் உழைப்பு அகற்றலுக்கான தேசிய கொள்கையானது 1987-ஆம் ஆண்டு ஏழாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திலேயே மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கும் தொழில்களில் சிறார்களை அதிகம் ஈடுபடுத்தப்படும் பகுதிகளைக் கண்டறிந்து ஒன்பது சிறப்புத் திட்டங்கள் - தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டு தேசிய சிறார் உழைப்பு அகற்றல் திட்டமானது சம்பல்பூர், தாணே மற்றும் கார்வா ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியான வளர்ச்சியைக் கொண்டதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகு முறைகளைக் கொண்டதாகவும் இத்திட்டம் இருந்தது.
சிறார் உழைப்புமுறை அதிகம் நடைமுறையில் இருக்கும் பகுதிகளில் அரசு அதிக கவனம் செலுத்தி சிறார் உழைப்பு அகற்றல் நடவடிக்கையை அவசியம் அமல்படுத்த வேண்டிய அதே வேளையில் சிறார் உழைப்பு பிரச்சினை நாடு முழுவதும் அதிக அளவில் பரவியிருந்ததால் இத்திட்டத்தின் முக்கியத்துவமும் அவசியமும் உணரப்பட்டது.
சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அதே 1994ஆம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி சிறார் உழைப்பு அகற்றல் தொடர்பான ஒரு பிரகடனத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பின் பயனாக 1994-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி சிறார் உழைப்பு அகற்றுதலுக்கான ஒரு தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் தலைவராகவும் உழைக்கும் சிறார் நலன் தொடர்புடைய தொழிலாளர் நலத்துறை, கல்வித் துறை, நலத்துறை, ஜவுளித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நிதித்துறை போன்ற பத்து அரசுத் துறை அதிகாரிகளைப் பிரதிநிதிகளாகவும் கொண்ட அமைப்பாக இருந்தது. முன்பே ஆரம்பிக்கப்பட்ட 12 திட்டங்கள் உட்பட 1995-96-இல் 76 சிறார் உழைப்பு அகற்றல் திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் 1800 சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்பட்டு 2500 ஆசிரியர்களைக் கொண்டு 1.05 லட்சம் சிறார்கள் கேடு விளைவிக்கக் கூடிய வேலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இத்திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
ஒவ்வொரு பள்ளியும் மூன்றாண்டு சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகள் செயல் முறை எழுத்தறிவு அளிக்கப்பட்டு அச்சிறார்கள் பள்ளிக் கல்வியில் குறிப்பிட்ட வகுப்புக்குச் சமான தகுதிக்கு உயர்த்தப்படுகின்றனர். பிறகு மூன்றாண்டு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இப்பரிட்சார்த்த திட்டத்தின் மைய நோக்கம் யாதெனில் சிறார்கள் கல்வியிலும் தொழில் முனைப்பிலும் நன்கு தேற்றப்பட்டு எல்லா வகையிலும் வலுவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்துடன் வாலிபப் பருவத்தை அடையும் போது சரியான தொழில் வாய்ப்பும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பக்குவமும், தன்னம்பிக்கையும் பெற்று வருவாய் ஈட்டி சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ வழி வகுப்பதேயாகும். தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் பொருளாதார விவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக் குழுவானது இத்திட்ட அணுகு முறைகளை அங்கீகரித்ததுடன் வேலைப்பளுவிலிருந்து சிறார்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு தேசிய சிறார் உழைப்பு அகற்றல் திட்டத்தினை ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டக் காலம் வரை நீட்டித்து அனுமதியும் வழங்கியது. மேலும் இத்திட்டத்தின் எண்ணிக்கை 100ஆக உயர்த்தப்பட்டு இந்த 100 திட்டங்களுக்காக 261 கோடி ரூபாயை அதே (1997- 2002) திட்டக் காலத்தில் ஒதுக்கியது.