எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா 5 அம்சத் திட்டம்..

கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சீனா அந்த இடத்தில் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியது. இதற்கு இந்தியா வர்த்தக ரீதியாகப் பதிலடி கொடுத்தது. அதன்பின், சீன படைகள் பின்னோக்கிச் சென்றாலும், மீண்டும் இந்திய எல்லைக்குள் முன்னேறியது.இந்நிலையில், கடந்த 7ம் தேதி மாலை 6 மணியளவில் எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையே, கடந்த வாரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றிருந்த இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், அங்குச் சீன பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். தற்போது அந்த மாநாட்டில் பங்கேற்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.

மாநாட்டுக்கு இடையே அவர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்யி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பிலும் எல்லைப் பிரச்சனையில் தங்களின் நிலை குறித்து விளக்கம் தெரிவித்துப் பேசப்பட்டது. எல்லையில் பதற்றத்தைத் தணிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து 5 அம்சத் திட்டம் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.இதன்படி, இருதரப்பிலும் உறவை வலுப்படுத்துவதற்குப் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவது, அந்தந்த நாட்டுத் தலைவர்களிடம் ஆலோசனை பெற்று, எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, இருதரப்பிலும் சிறப்புப் பிரதிநிதிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது, எல்லையில் போர்ப் படைகளைக் குறைத்துக் கொள்வது போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.பின்னர், எல்லையில் பதற்றத்தைத் தணித்து இருநாடுகளுக்கும் நல்லுறவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தனித்தனியாக அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

More News >>