பிரபல காமெடி நடிகரின் சோக மரணம்.. லட்ச லட்சமாய் கொடுத்தும் சரியான சிகிச்சையில்லை: குடும்பத்தினர் கடும் குற்றச்சாட்டு..

டிவியில் பிரபலமாகி பிறகு சுட்ட பழம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் வடிவேல் பாலாஜி. வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருந்த வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. வடிவேல் பாலாஜி இறப்பதற்கு முன் கடந்த 15 நாட்களாக அவரது உயிரைக் காப்பாற்ற குடும்பத்தினர்பட்ட அவஸ்தைகளை பாலாஜியின் தாயார் திலகவதி கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:என் மகன் வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அவரை அழைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு ஐசியு வார்டில் வைத்திருந்தார்கள். அங்கு ஆயிரம் ரூபாய் கட்டிவிட்டு ரிலீவ் சீட்டுடன் வெளியில் வந்து அமைந்தக்கரை மருத்துவமனைக்குச் சென்றோம் அங்கு இரண்டே முக்கால் லட்சம் கட்டினோம். பிறகு அங்கிருந்து வடபழனியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு 10 நாள் இருந்தார். 10 லட்சத்துக்குமேல் கொடுத்துவிட்டுத்தான் வெளியில் வந்தேன். எல்லா பணமும் கொட்டி கொடுத்துவிட்டுத் தான் வந்தோம் சரியாகவில்லை. மாரடைப்பிற்காகத்தான் பாலாஜியைச் சேர்த்தோம். கொரோனா தொற்று கிடையாது கொரோனா டெஸ்ட் எடுத்ததில் தொற்று இல்லை எனது தெரிந்தது. அதற்கான ரிசல்ட் உள்ளது.இவ்வாறு பாலாஜியின் தாயார் கூறினார்.

பாலாஜி உறவினர் ஒருவர் கூறும் போது, 3 தனியார் மருத்துவமனையில் மாறி மாறி வடிவேல் பாலாஜியை சேர்த்தும் சரியான சிகிச்சை அளிக்காமல் லட்ச லட்சமாகப் பணம் தான் பிடுங்கினார்கள். இடது பக்கம் பக்க வாதத்தால் பாதித்திருக்கிறது 5 நாளில் குணம் ஆகிவிடும், பிசியோ தெரபி கொடுத்தால் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். அதையும் செய்தோம் சுமார் மொத்தமாக 20 லட்சம் செலவு செய்தோம். கடைசிக் கட்டமாகத்தான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் அங்கு ஒன்றரை நாள் சிகிச்சையில் இருந்தார் பிறகு இறந்து விட்டார். தனியார் மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை எங்களுக்குப் பணமும் போச்சு, பாலாஜியும் போய் விட்டார் என்றார்.வடிவேல் பாலாஜி உடலுக்கு டிவி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

More News >>