மல்ட்டி டாஸ்க்கிங் வேண்டாம்... ஏன்? எதற்கு? வேறு என்ன செய்யலாம்?
பல வேலைகள் தெரிந்தவருக்கு இருக்கும் மதிப்பு தனிதான்! இரண்டு பேர், மூன்று பேர் என்று தனித்தனியே நபர்களை வைத்துக்கொள்வதற்கு பதில் ஒருவரையே வைத்துக்கொள்வது பொருளாதாரரீதியாகவும் லாபமான ஒன்று.
வேலைக்காக விண்ணப்பிக்கும்போதே என்னென்ன வேலைகள் தெரியும் என்று பட்டியலிடுகிறோம். "இது தவிர வேறு என்ன செய்ய தெரியும்?" என்பதும் நேர்முக தேர்வில் அதிகமாக கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று.
'மல்ட்டி டாஸ்க்கிங்' எனப்படும் இந்த பல வேலை, உண்மையில் பயன்தருகிறதா என்ற ஆய்வுகள், எதிர்மறையான மதிப்பீட்டையே அளித்துள்ளன. வேலையில் மட்டுமல்ல, உடன் பணிபுரிவோருடனான உறவையும் இது பாதிக்கிறது.
மூளைக்குச் சிரமம்
நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளின் ஈடுபடும்போது மூளை, ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு வேலையில் கவனம் செலுத்தும்போது இன்னொன்று கவனத்தை சிதைக்கிறது. இந்தக் கவனச் சிதைவே வேலைகளுக்கிடையே மாற்றி மாற்றி கவனம் செலுத்துவதற்கு மூளைக்கு சமிக்ஞை (சிக்னல்) தருகிறது. இதுபோன்ற கவனச் சிதைவால் மனதின் ஆற்றல் பெருமளவில் வீணாகிறது. ஒரே வேலையில் கவனம் இருக்கும்போது அவ்வளவு அதிக ஆற்றல் செலவாவதில்லை. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்யும்போது அவை முடிக்கப்படவேண்டிய நேரமும் அதிகமாகிறது.
குழப்பமும் தவறுகளும்
பல வேலைகளைச் செய்து கவனம் சிதறும்போது, வேலைகளின் விவரங்களை தவறவிட்டுவிடுவோம். கவனகுறைவாக முக்கியமான விஷயங்களை கூட விட்டுவிட வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனகுறைவு ஏற்படுவது மிகப்பெரிய இழப்பில்போய் முடியும். சிறிய சிறிய கவனகுறைவு தவறுகள் அதிகமாகும்போது வேலையின் தரம் குறைகிறது.
மல்ட்டி டாஸ்க்கிங் தவறுதான். அதை எப்படி சரி கையாள்வது?
முன்னுரிமை பட்டியல்
தினமும் வேலையை ஆரம்பிக்கும் முன்பாக, அன்றைக்கு செய்யவேண்டிய வேலைகளை பட்டியலிடுங்கள். அவற்றை அவசரமானவை; முக்கியமானவை என்று வகைப்படுத்துங்கள். அவசரமானவற்றை முதலிலும் முக்கியமானவற்றை அடுத்தும் செய்யலாம்.
நேர ஒதுக்கீடு
குறிப்பிட்ட வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும். உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு இதை சரியானமுறையில் தெரிவிக்கவேண்டும். குறிக்கப்பட்ட நேரத்தில் குறிக்கப்பட்ட வேலையை மட்டும் செய்வது கவனச்சிதைவு ஏற்படாமல் தவிர்க்கும். ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது இன்னொன்றில் கவனம் செல்வதை தவிர்க்க இது உதவும்.
உங்களுக்கான நேரம்
வேலைகளுக்கான நேரத்தை ஒதுக்குவதோடு பணி நேரத்திலேயே நீங்கள் தனிமையாயிருப்பதற்கான நேரத்தை ஒதுக்கீடு செய்துகொள்ளுங்கள். நீங்கள் சற்றுநேரத்தை தனிமையில் செலவழித்தே ஆகவேண்டும். வேலைகளுக்கிடையே தனிமையாய் இருக்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேலைகளின் முன்னுரிமை பட்டியலை பார்வையிடலாம். தொடர்ந்து மற்ற வேலைகளை செய்வதற்கு மனதை ஆயத்தப்படுத்தலாம். வேலைகளுக்கு ஆயத்தமாவது, அதை செய்து கொண்டிருக்கும்போது தேவையற்ற சந்தேகங்கள் தோன்றுவதை தவிர்க்க உதவும்.
மற்றவர்களை புரிந்துகொள்ள செய்தல்
உங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு உங்கள் மாற்றம் வித்தியாசமானதாக தெரியும். அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரம் குறைந்துவிட்டதாக எண்ணி கோபமும் படக்கூடும். இந்த மாற்றங்களை ஏன் செய்துள்ளீர்கள் என்பதை விளக்குங்கள். குழுவின் வேலைதிறனை கூட்டுவதற்காக இதை செய்துள்ளீர்கள் என்று புரிய வைப்பது முக்கியம். அதன்பிறகு நல்ல பலன் கிடைக்கும்.