பைக்கை திருடிய வாலிபர் மோதிய வாகனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா?
கொச்சி அருகே பைக்கை திருடி விட்டு சென்ற வாலிபர் அந்த பைக்கின் உரிமையாளர் ஓட்டிய அரசு பஸ் மீது மோதி அவரிடமே வசமாக சிக்கினார்.திருடனுக்கு தேள் கொட்டிய கதை என்ற பழமொழி குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு சம்பவம் கேரளாவில் நடந்தது. கோட்டயத்தை சேர்ந்தவர் பிஜு அனி சேவியர். இவர் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக உள்ளார். பணிக்கு செல்லும் போது தனது பைக்கை இவர் கோட்டயம் பஸ் டெப்போவில் நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.கடந்த சில தினங்களுக்கு முன் பிஜு வழக்கம் போல தனது பைக்கை டெப்போவில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். இரவில் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து அவர் கோட்டயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பிஜு வழக்கம் போல பணியில் இருந்தார். கொச்சி உதயம்பேரூர் அருகே இவர் பஸ்சில் சென்று கொண்டிருந்த போது இவரது பஸ்சில் ஒரு பைக் மோதியது. உடனே பிஜு இறங்கி பார்த்தபோது பைக்கிலிருந்த வாலிபர் கீழே விழுந்து கிடந்தார். அவருக்கு அதிகமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. தற்செயலாக அந்த வாலிபர் வந்த பைக்கை பார்த்த பிஜு அதிர்ச்சியடைந்தார்.ஏனென்றால் அந்த பைக் திருடு போன பிஜுவின் பைக் ஆகும். அந்த வாலிபர் தான் பைக்கை திருடியவர் என்பதை கண்டுபிடித்த பிஜு அவரை பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து விசாரித்த போது அது திருட்டு பைக் என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்த போது அவரது பெயர் ஜிஜோ (28) என்றும் கோட்டயம் சங்கனாச்சேரியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தன்னுடைய பைக்கை திருடிய ஆசாமி தன்னிடமே சிக்கிய மகிழ்ச்சியில் பைஜு பஸ்சை ஓட்டிச் சென்றார்.