பிரபல நடிகைக்காக கவர்னரை சந்தித்த மத்திய அமைச்சர்..
பாலிவுட் நடிகைக்காக, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, மகாராஷ்டிர கவர்னரை சந்தித்து புகார் கொடுத்தார்.பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறி விட்டது என்று கூறினார். அதற்கு மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், கங்கனா தொடர்ந்து சிவசேனாவுக்கு எதிராக கடுமையாக ட்விட் செய்தார். இதையடுத்து, சிவசேனா எம்.பி. சஞ்சய்ராவத், மும்பை மாறி விட்டதால், நீங்கள் இங்கே வர வேண்டாம் என்று பதில் கொடுத்தார். ஆனால், மணாலியில் இருந்த கங்கனா, நான் மும்பைக்கு வருவேன் என்று கூறினார். இதைத் தொடர்ந்து, நடிகை கங்கனாவுக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு அளித்தது. முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படும் இந்த பாதுகாப்பில் 9 மத்திய போலீசார் இருப்பார்கள். இந்த படை சூழ மணாலியிலிருந்து கங்கனா மும்பை வந்தார்.இதற்கிடையே, மும்பையில் உள்ள கங்கனாவின் பங்களாவில் அனுமதி பெறாமல், சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாக கூறி, கட்டிடத்தின் முகப்பில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. மேலும், கங்கனா வருவதற்குள் வீட்டில் முன்பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதன்பின், கட்டிட இடிப்புக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து, கட்டிடத்தை இடிக்கும் வீடியோவை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஜனநாயகம் செத்துவிட்டது என்று ஹேஷ் டேக் வெளியிட்டார். சமூக ஊடகங்களில் கங்கனாவுக்கு ஆதரவாக கட்டிட இடிப்பு படங்களுடன் பதிவுகள் வெளியாயின. அந்த படங்கள், வேறு சம்பவத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்றும் சில பதிவுகள் போடப்பட்டன. கங்கனாவுக்கு எதிராக சிவசேனா கட்சியினரும் பதிவுகளை போட்டனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே இன்று கவர்னரை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் அளித்த பேட்டி வருமாறு:நான் மகாராஷ்டிர கவர்னரை சந்தித்து, கங்கனா வீட்டு கட்டிடம் இடிக்கப்பட்டது குறித்து புகார் கொடுத்தேன். அந்த கட்டிடத்தை மாநகராட்சி இடித்த விதம் தவறானது. கங்கனாவுக்கு இழப்பீடு தரப்பட வேண்டும். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.