மைசூர் அருகே கொடூரம், 3 காவாலாளிகளை கல்லைப் போட்டு கொன்று கொள்ளை
மைசூர் அருகே மாண்டியாவில் கோவில் காவலாளிகள் 3 பேரை கல்லைப் போட்டு கொன்று உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள மாண்டியா கட்டாலுவில் பிரசித்தி பெற்ற அரகேஸ்வர் கோவில் உள்ளது. அப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் என்பதால் கோவில் பாதுகாப்புக்காக பிரகாஷ், கணேஷ் மற்றும் ஆனந்த் என்ற 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று இவர்கள் 3 பேரும் வழக்கம் போல பணியில் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை பூசாரிகள் வழக்கம் போல கோவிலை திறப்பதற்காக வந்தனர்.அப்போது கோவில் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது காவலாளிகள் 3 பேரும் தலை சிதைந்த நிலையில் கொல்லப்பட்டு கிடந்தனர். கோவிலில் இருந்த 5 உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து மாண்டியா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் குறைந்தது 5 பேருக்கு மேல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். உண்டியலில் இருந்த பணத்தை மட்டும் கொள்ளையடித்த அக்கும்பல் சில்லறையை அங்கேயே போட்டு விட்டு சென்றது. 3 காவலாளிகளை கொடூரமான முறையில் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று கோவிலில் கொள்ளையடித்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.