கொரோனாவால் உயிரிழந்த எம்ஜிஆரின் அண்ணன் மகன்!
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரின் பெயர் எம்.ஜி.சி.சந்திரன். 75 வயதான அவர் தனது மனைவி சித்ராவுடன் சென்னை அண்ணா நகர் சாந்தி காலணியில் இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தார். இவர் கடந்த 2017 ஆண்டில் அண்ணா எம்ஜிஆர் அம்மா திமுக என்கிற கட்சியை ஆரம்பித்தார். இதற்கிடையே, சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து திங்கட்கிழமை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அங்கு, மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்றுக்கூட, அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வெளியானது.இந்நிலையில் இன்று காலை அவரின் உடல்நிலை திடீரென்று மோசமானது. இதையடுத்து வென்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்யத் தொடங்கினர். ஆனால் வென்டிலேட்டர் கருவி பொருத்துவதற்கு முன்பே அவரின் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.