டாக்டர்களின் ஸ்டிக்ரிட் அட்வைஸ்.. பாராளுமன்றக் கூட்டத்தை தவிர்க்கும் மன்மோகன், சோனியா!

அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உறுப்பினர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளியைப் பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்படுவது, இரு அவைகளையும் ஷிப்ட் அடிப்படையில் நடத்துவது என்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரில், வயதான எம்பிக்கள் பங்கேற்கப் போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது மூப்பின் காரணமாகவும், உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் கூட்டத்தில் பங்கேற்க அவரது மருத்துவர்கள் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் முதல்நாள் கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டு அவர் வீட்டில் ஓய்வெடுப்பார் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில்தான் இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார் என்பதால், அவரது மருத்துவர்களின் அட்வைஸ் படி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரும், கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்தான் என்கிறார்கள். ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.பி.க்கள் சிசிர்அதிகாரி, சவுத்ரி மோகன் ஆகியோர்கள் பங்கேற்க மாட்டார்கள் என மம்தா அறிவித்துள்ளார். கேரள காங்கிரசைச் சார்ந்த ஏகே அந்தோணி, வயலார் ரவி ஆகியோரும் வயது மூப்பின் காரணமாகத் தொடரைப் புறக்கணிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>