தங்கக் கடத்தல் விவகாரம், கேரள அமைச்சரிடம் மத்திய அமலாக்கத் துறை அதிரடி விசாரணை

வெளியுறவுத் துறையின் அனுமதி இல்லாமல் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அன்பளிப்புகளை பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தால் கேரள அரசியலில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்தக் கடத்தல் தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் நிர்வாக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், முன்னாள் பி.ஆர்.ஓ சரித்குமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவும் விசாரணை நடத்தி வருகிறது.மேலும் சுங்க இலாகாவும், மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல் அமீரக தூதரகத்துடன் தொடர்பு வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது தெரியவந்தது. வெளியுறவுத் துறை சட்டத்தின்படி மாநில அமைச்சரோ, மாநில அரசு அதிகாரிகளோ ஒரு நாட்டின் தூதரகத்துடன் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது.

ஆனால் அமைச்சர் ஜலீல் கடந்த சில மாதங்களுக்கு முன் தூதரகத்திடமிருந்து உணவுப் பொருளை பெற்று மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விநியோகித்தது தெரியவந்தது, மேலும் அனுமதி இல்லாமல் தூதரக பார்சலில் துபாயிலிருந்து புனித குர்ஆன் நூல்களை வரவழைத்து விநியோகித்ததும் தெரியவந்தது. குர்ஆன் வந்த பார்சலில் வேறு ஏதேனும் பொருட்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது.இதையடுத்து அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை எந்த நேரத்திலும் விசாரணை நடத்தலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை கொச்சியிலுள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 3 மணிநேரம் நடந்த விசாரணையில் தூதரக பார்சலில் குர்ஆன் தவிர வேறு ஏதேனும் பொருட்கள் கொண்டு வரப்பட்டதா, தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அமைச்சரிடம் விவரங்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது கேரள அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>