இதனால் தான் கல்லூரி படிப்பை பாதியில் விட்டேன், நடிகர் பிருத்விராஜ்
எதிர்பாராமல் கிடைத்த சினிமா வாய்ப்பினால் தான் ஆஸ்திரேலிய கல்லூரி படிப்பை நான் பாதியில் விட நேர்ந்தது என்று நடிகர் பிருத்விராஜ் கூறினார்.பிரபல மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜுக்கு சினிமாவில் பல முகங்கள் உள்ளன. தற்செயலாக சினிமாவுக்குள் நுழைந்த இவர் இப்போது மலையாள சினிமாவில் பேசப்படுபவர்களில் ஒருவராக மாறிவிட்டார். மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற பம்பர் ஹிட் படத்தை இயக்கி நட்சத்திர டைரக்டராகவும் ஆகிவிட்டார். அதுமட்டுமல்லாமல் இதுவரை மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.கதாபாத்திரம் பிடித்திருந்தால் எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கவும் இவர் தயங்க மாட்டார். சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தில் பிஜு மேனனுடன் இணைந்து இவர் நடித்தார். இந்தப் படத்தில் இறுதி வரை வில்லன் கதாபாத்திரமோ என்று தோன்றும் வகையில் அவர் நடித்திருந்தார்.சென்னையில் பள்ளிப்படிப்பை தொடங்கிய இவர் பின்னர் குன்னூர், திருவனந்தபுரம் உட்பட இடங்களிலுள்ள பள்ளிகளில் படித்தார். பின்னர் ஆஸ்திரேலியாவிலுள்ள டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஐடி படிக்க சேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருந்தபோது தான் 2002ல் கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். அப்போது பிரபல டைரக்டர் ரஞ்சித் நந்தனம் என்ற தனது புதிய படத்திற்காக ஒரு புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்தார்.பிருத்விராஜ் குறித்து கேள்விப்பட்ட ரஞ்சித் அவரையே நாயகனாக்க தீர்மானித்தார். ஆனால் பிருத்விராஜுக்கு முதலில் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை. சிலரின் நிர்ப்பந்தத்தின் காரணமாக இறுதியில் அவர் அந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தார். அதுதான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றும், அந்த சினிமாவில் நடித்ததால் தான் எனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று பிருத்விராஜ் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
நந்தனம் படத்தில் பூஜையின் போது எடுத்த ஒரு போட்டோவையும் அவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். கோடை விடுமுறைக்காக ஊருக்கு வந்த எனக்கு நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்க ஏதோ ஒன்று கிடைத்தது. பின்னர் நான் கல்லூரிக்கு திரும்பவில்லை. நாளை நமக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் வாழ்க்கை நம்மை வெள்ளம் போல இழுத்து செல்லும். அதன் வழியே செல்லும் போது நாம் எதிர்பாராத பல சம்பவங்களும் நடக்கும். அது தான் எனது வாழ்க்கையிலும் சம்பவித்தது என்று பிருத்விராஜ் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.