வராக நதியை சுத்தம் செய்ய களமிறங்கிய மண்ணின் மைந்தன்!
தேனி மாவட்டம், பெரியகுளம் நகருக்குள் பல நூற்றாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவ நதி தான் வராக நதி . கடந்த சில ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாமல் சாக்கடைகளுக்கும் , இறைச்சி கழிவுகளுக்கும் அடைக்கலம் தந்து கொண்டிருக்கிறது "வராக நதி " .இந்நிலையில் அதிமுகவைச் சார்ந்த தேனி தொகுதியின் மக்களவை உறுப்பினரும் , துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் மகனான ரவீந்திரநாத் குமார் அவர்கள் இந்த பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார். அவர் நதியைச் சுத்தம் செய்ய " சேவ் வராக" என்ற திட்டத்தைத் துவங்கியுள்ளார். இதன் மூலம் நதியை புணரமைத்து புத்துயிர் அளிக்க நகராட்சியின் உதவியையும் நாடியுள்ளார்.
வராக நதியானது கொடைக்கானல் , பேரீச்சம் பகுதியிலிருந்து வரும் சிற்றாருகளின் சங்கமத்தால் உருவானது . ஆனால் சோத்துப்பாறை பகுதியில் அணை கட்டிய பிறகு நீர் மூலங்கள் அனைத்தும் அணைக்குத் திருப்பிவிடப்பட்டதால் . வராக நதியானது தண்ணீர் இன்றி வறண்டு தன் எழில் பொலிவை இழந்தது.ஏற்கனவே நகராட்சியின் தலைவராக இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரின் சகோதரர் ஓ.ராஜா அவர்கள் இந்த நதியைச் சீரமைக்க சில நடவடிக்கைகள் எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து திரு . ரவீந்திரநாத்குமார் கூறியது இந்த நதியானது தன் பங்களிப்பால் இந்த பகுதிகளை வற்றாது மிகப் பசுமையாக வைத்திருந்தது. இது 30 கிலோ மீட்டர் பயணித்து சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்குப் பாசன வசதியைத் தந்துள்ளது. எனவே சேவ் வராக என்ற திட்டத்தைத் துரித நடவடிக்கை எடுத்து முடிக்கப் பாடுபடுவேன் என்றார். மேலும் இந்த திட்டத்திற்கான நிதியைப் பிரதமரின் ஜல் சக்தி திட்டத்திலிருந்து பெற உள்ளதாகவும், மாநில அரசின் உதவியுடன் கூடிய விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.இதன் முதற்கட்டமாக நகராட்சியின் உத்தரவின் பேரில் நதியில் கலக்கும் இறைச்சி கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இறுதியில் அவர் வைரமுத்துவின் வரிகளான " வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் " என்ற பாடலை நினைவு கூர்ந்து கூடிய விரைவில் நதியை அந்த நிலைக்கு மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.