விடைத்தாளை வெளியே எடுத்து சென்று எழுதி முறைகேடு! - 800 மாணவர்கள் தேர்வு எழுத தடை
பல்கலைக்கழக தேர்வுகளில் விடைத்தாள்களில் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்ததை அடுத்து, 800 மாணவர்கள் இனி தேர்வு எழுத தடை விதிப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்டப் படிப்புகள், உயர் படிப்புகள் தொலைதூரக் கல்வி மூலம் படிப்பதற்கான வசதிகள் உள்ளன. சென்னையில் பல்கலைக் கழகம் தமிழகத்தில் மட்டுமில்லாது பிற மாநிலங்களிலும் மையங்களை அமைத்துள்ளது. மைசூர், ஹைதராபாத், மும்பையில் அதனுடைய படிப்பு மையங்கள் செயல்பட்டன.
தற்போது, அந்த மையங்கள் மூலமாக நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் முறைகேடு செய்து தேர்வு எழுதியதாக புகார் வந்ததையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரகசியமாக விடைத்தாள்களை ஆய்வு செய்தனர்.
அப்போது 800 மாணவர்களின் விடைத்தாள்களில் மோசடி நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விடைத்தாள்களில் வெவ்வேறு விதமான கையெழுத்து இடம் பெற்று இருந்தது, தேர்வு கண்காணிப்பாளரின் கையொப்பம் மாறுபட்டும் விடைகள் அழகாக, தெளிவான கையெழுத்தால் எழுதப்பட்டிருந்தது.
விடைத்தாளை வெளியில் கொண்டு சென்று எழுதி இருக்கலாம் எனவும் கருதப்பட்டது. 2016-ம் ஆண்டு நடந்த இந்த தேர்வு முறைகேடு குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், 800 மாணவர்கள் முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்க சிண்டிகேட் குழு முடிவு செய்தது.
தமிழகத்தில் மட்டுமின்றி வேறு எங்கும் அவர்கள் தேர்வு எழுத முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டது பிற மாநில மாணவர்கள் அல்ல; அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com