மத்திய அமலாக்கத் துறை விசாரணை, அமைச்சர் ஜலீலுக்கு எதிராக கேரளாவில் போராட்டம் தீவிரம்
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்திய கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஒரு நாட்டின் தூதரகத்திற்கு வரும் பார்சலில் தங்கம் கடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத் துறையான என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
மேலும் சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் கேரள உயர்கல்வித் துறை அமைச்சரான ஜலீல், அமீரக தூதரகம் மூலம் குர்ஆன் நூல்களை இறக்குமதி செய்ததும், தூதரகத்திடமிருந்து உணவுப் பொருட்களைப் பெற்று தனது தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.அரசு நெறிமுறை சட்டத்தின் படி மாநில அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ ஒரு நாட்டின் தூதரகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடாது. மேலும் குர்ஆன் வந்ததாகக் கூறப்படும் பார்சல்களில் குர்ஆன் தவிரத் தங்கமோ, அல்லது வெளிநாட்டுப் பணமோ கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணை அமைப்புகளுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அமைச்சர் ஜலீலிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா, என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தீர்மானித்திருந்தன. இந்நிலையில் நேற்று கொச்சியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும் படி அமைச்சர் ஜலீலுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேல் விசாரணை நடந்தது.ஆனால் மாலை வரை தன்னிடம் விசாரணை நடத்தப்பட்ட தகவலை அமைச்சர் ஜலீல் வெளியே விடவில்லை. நேற்று மாலை டெல்லியிலுள்ள அமலாக்கத் துறை அதிகாரி இந்த தகவலைக் கூறிய பின்னர் தான் விசாரணை நடந்த தகவல் வெளியானது. அமைச்சர் ஜலீல் விசாரணைக்கு ஆஜராகச் செல்லும் போது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அரசு காரை கொச்சியிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு வாடகை காரை பிடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
3 மணிநேரம் நடந்த விசாரணையில் குர்ஆன் நூல்கள் வந்த பார்சலில் அவை மட்டுமல்லாமல் தங்கமோ அல்லது வெளிநாட்டுப் பணமோ இருந்ததா, தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்பன உட்பட விவரங்கள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் பதில்கள் அமலாக்கத் துறைக்கு திருப்தியளிக்கவில்லை என்றும், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.இதற்கிடையே மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அமைச்சர் ஜலீல் பதவி விலகக் கோரி கேரளாவில் காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் உட்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உட்படக் கேரளா முழுவதும் அனைத்துப் பகுதிகளிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் இந்தப் போராட்டங்களால் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. தடியடி மற்றும் கல்வீச்சில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.