நீட் தேர்வு பயத்தில் இறப்பது தற்கொலை அல்ல.. கனிமொழி கருத்து..

நீட் தேர்வு அச்சத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த மரணங்களைத் தற்கொலையாகக் கருத முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் என்ற தகுதித் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி, பல்வேறு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடியாயின. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, நீட் தேர்வின் மீதான பயம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர், கடந்த வாரம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் மாணவ,மாணவியர் மனம் புழுங்கி இறப்பது, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவங்கள் குறித்து திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருக சுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.

கடந்த வாரம், தேனியைச் சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளைக் கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?

இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.

More News >>