மாணவி ஜோதிஸ்ரீ தற்கொலை.. மனவேதனை அளிப்பதாக முதலமைச்சர் இரங்கல்..
மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நீட் தேர்வின் மீதான பயம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர், கடந்த வாரம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் மாணவ,மாணவியர் மனம் புழுங்கி இறப்பது, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருக சுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜோதி ஸ்ரீ துர்காவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீர்கள்; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு என்று அவர் பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது.ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதி ஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது.தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன். நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.