வயிற்றில் லைட் எரியும் தவளை சமூக இணையதளங்களில் வீடியோ வைரல்...!
வயிற்றில் லைட் எரியும் தவளையின் வீடியோ சமூக இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களாக சமூக இணையதளங்களில் வயிற்றில் விளக்கு எரியும் ஒரு தவளையின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஆச்சரியமும், பீதியும் அடைந்தனர். அது எப்படி தவளையின் வயிற்றில் இருந்து வெளிச்சம் வரும் என்று அனைவரும் தலையை பிய்த்துக் கொண்டனர். அந்த வீடியோவை பலமுறை பார்த்த பின்னரும் யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
ஒரு சுவற்றின் மீது அசையாமல் நின்று கொண்டிருக்கும் அந்த தவளையின் வயிற்றில் இருந்து திடீர் திடீரென்று லேசான வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. பின்னர் தான் அதற்கு என்ன காரணம் என தெரியவந்தது. அந்த தவளை ஒரு மின்மினிப் பூச்சியை தின்றிருந்தது. அந்த மின்மினிப் பூச்சி தான் தவளையின் வயிற்றுக்குள் இருந்தும் மின்னிக் கொண்டிருந்தது என்று தெரியவந்தது.
இந்த உண்மை தெரிந்த பின்னர் தான் சிலருக்கு நிம்மதி ஏற்பட்டது. நேச்சர் இஸ் லிட் என்ற ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து தான் 12 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ பகிரப்பட்டது. ஒரு சில மணிநேரத்திலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து விட்டனர்.