காலுக்கு கீழே சிக்கிய புழுவை போல என்னை பார்த்தார்கள் - நாஞ்சில் சம்பத் ஆதங்கம்

ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள் என்று நாஞ்சில் சம்பத் வேதனையோடு தெரிவித்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதி டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் பெயரின் திராவிடம் இல்லை என்று கூறி, கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கட்சியில் இருந்து விலகுவதாகவும், அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார்.

மேலும், “நான் பொது வாழ்வில் 30 வருடங்களாக டாக்டர் கலைஞர் தலைமை ஏற்று, அண்ணன் வைகோ தலைமை ஏற்று, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று பயணம் செய்துள்ளேன். என்னுடைய உலகம் மேடை. நான் கொண்டுள்ள கொள்கையை வானம் அதிர பேச வேண்டும் என்பதைத் தவிர வேறு கொள்கையில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்க துணையாகவும் இருக்க தீர்மானித்தேன்.

அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>