ஆபாச தளங்களை பார்ப்பவர்களை குறி வைக்கும் மோசடி பேர்வழிகள்

போர்ன் சைட் எனப்படும் ஆபாச இணையதளங்களை பார்ப்பவர்களை மோசடி பேர்வழிகள் குறிவைப்பதாக மால்பேர்பைட்ஸ் என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடோப் ஃப்ளாஷ் மற்றும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகியவற்றை பயன்படுத்துவோரை இக்கும்பல் குறிவைக்கிறது. கணினியை பயன்படுத்துவோரில் பெரும்பான்மையானோர் அடோப் ஃப்ளாஷை நீக்கியிருப்பார்கள் அல்லது கூகுள் குரோம் அல்ல மாஸில்லா பயர்ஃபாக்ஸுக்கு மாறியிருப்பர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் பரிந்துரைத்தும் உலகம் முழுவதும் பல பயனர்கள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் நவீனமான இணைய உலவிகளுக்கு (பிரௌஸர்) மாறாமல் இருக்கின்றனர். அடோப் ஃப்ளாஷ் மற்றும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரின் பாதுகாப்பு குறைபாடுகளை கருத்தில் கொண்டு மோசடி பேர்வழிகள் மென்பொருள்களை வடிவமைத்துள்ளனர்.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் ஆபாச தளங்களை பார்ப்பவர்களை விளம்பரங்கள் மூலம் மோசடி பேர்வழிகள் கவருகின்றனர். ஆபாச தளங்களில் வரும் விளம்பரங்கள் மேல் சொடுக்கினால் (கிளிக்) அது மோசடி பேர்வழிகளின் மென்பொருளை பயனரின் கணினியில் தரவிறக்கம் செய்யும்.

ஸ்மோக் லோடர், ராக்கூன் ஸ்டீலர் மற்றும் இசட்லோடர் போன்ற மென்பொருள்களையும் ஜாவாஸ்கிரிப்டையும் பயன்படுத்தியே மோசடி பேர்வழிகள் தகவல்களை திருடி விடுகின்றனர்.

அடோப் ஃப்ளாஷ் பிளேயருக்கான பாதுகாப்பு கடைசியாக கடந்த ஜூன் மாதம் புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டின் கடைசியில் மைக்ரோ சாஃப்ட் எட்ஜ் மற்றும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 ஆகியவை அடோப் ஃப்ளாஷ் பிளேயரை அனுமதிப்பதை நிறுத்திவிட உள்ளன. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பராமரிக்கப்போவதில்லை என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. பயனர்கள் எட்ஜ் பிரௌஸரை உபயோகிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>