ரோட்டில் கிடந்த 40 லட்சம் நகை, 10 லட்சம் பணம், போலீசில் ஒப்படைத்த இந்தியருக்கு பாராட்டு
துபாயில் ரோட்டில் அனாதையாக கிடந்த 40 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள நகைகள் மற்றும் 10 லட்சம் பணம் அடங்கிய பேக்கை ஒப்படைத்த இந்தியருக்கு துபாய் போலீஸ் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.ரோட்டில் 1 ரூபாய் நாணயம் கிடந்தாலே யாரும் கவனிக்கிறார்களா என்று ஓரக்கண்ணால் பார்த்து விட்டு நைசாக அதை எடுத்து பாக்கெட்டில் போடுபவர்களைத் தான் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால் துபாயில் ரோட்டில் கிடந்த அரைக்கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை பார்த்தும் அதற்கு மயங்காமல் அதை போலீசில் ஒப்படைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் ஒரு இந்தியர்.
ரிதேஷ் ஜேம்ஸ் குப்தா என்ற அந்த இந்தியர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ரோடு ஓரத்தில் ஒரு பேக் கிடந்ததை கவனித்தார். முதலில் அதை கண்டுகொள்ளாமல் சென்று விடலாம் என ரிதேஷ் நினைத்தார். ஆனால் உள்மனதில் அந்த பேக்கை எடுத்து பார்க்கலாம் என்று தோன்றியதால் காரை நிறுத்தி விட்டு அந்த பேக்கை எடுத்து பார்த்தார்.திறந்து பார்த்த ரிதேஷ் அதிர்ச்சியடைந்தார். அந்த பேக்கில் 14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (10,28,671 ரூபாய்) மற்றும் 54,453 அமெரிக்க டாலர் மதிப்புள்ள (40,00,942 ரூபாய்) நகைகள் இருந்தன. உடனடியாக ரிதேஷ் அந்த பேக்கை போலீசிடம் ஒப்படைக்க தீர்மானித்தார். அவர் நேராக துபாயிலுள்ள அல்குசைஸ் போலீஸ் நிலையத்திற்கு சென்று அந்த பேக்கை ஒப்படைத்தார். ரிதேசின் நற்செயலை துபாய் போலீசார் பாரட்டினர். பின்னர் அவருக்கு ஒரு நற்சான்றிதழ் வழங்கியும் போலீசார் கவுரவித்தனர். ரிதேஷின் இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என்று அல்குசைஸ் போலீஸ் டைரக்டர் பிரிகேடியர் யூசுப் அப்துல்லா கூறினார்.