கோவிட் நோயாளிகளுக்கு நிரந்தர நரம்பு பாதிப்பு: பிரிட்டிஷ் ஆய்விதழ் தகவல்
தீவிர பாதிப்புள்ள கோவிட் நோயாளிகள் செயற்கை சுவாச முறையால் நிரந்தர நரம்பு பாதிப்பை அடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவிட் தவிர்த்த ஏனைய நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்தின் மூலம் இப்பாதிப்பு நேர்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
கோவிட்-19 கிருமியால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு வசதியாகவும் உயிரிழப்பை தவிர்க்கும்வண்ணமாகவும் குப்புறப் படுக்கவைத்து செயற்கை சுவாசம் (வென்ட்டிலேட்டர்) அளிக்கப்படுகிறது. உயிர் காக்கும் இம்முயற்சியால் நிரந்தர நரம்பு பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
கோவிட் தவிர்த்த ஏனைய நோயாளிகள் இதுபோன்ற சிகிச்சையில் பாதிக்கப்படவில்லை. இரத்த ஓட்டம் குறைவதாலும் அழற்சியாலும் கோவிட் நோயாளிகளுக்கு நரம்பு பாதிக்கப்படுவதாக மயக்கவியலுக்கான பிரிட்டிஷ் ஆய்விதழ் (British Journal of Anaesthesia)தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் படி தீவிர பாதிப்புள்ள கோவிட் நோயாளிகளில் 12 முதல் 15 சதம் பேர் நரம்பு பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. மற்ற தீவிர பாதிப்புள்ள நோயாளிகள் மத்தியில் காணப்படுவதை விட அதிக சதவீதமான கோவிட் நோயாளிகள் நரம்பு பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று இந்த ஆய்வின் ஆசிரியரும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவருமான காலின் ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளார்.
மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் தோள் ஆகிய இடங்கள் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் இது நடப்பது, எழுதுவது மற்றும் கணினி, மொபைல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளை பாதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.