நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும்..
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்குகிறது.கோவிட் 19 தொற்று காரணமாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் 2 பிரிவுகளாக நடைபெற உள்ளது. மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் மசோதாக்களுக்கு அனுமதி இல்லை. மேலும், பூஜ்ய நேரத்தில் ஏற்கனவே நாடாளுமன்றச் செயலகம் அனுமதித்த விவகாரங்கள் மட்டுமே விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. எனினும், கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு தெரிவித்து விட்டது.அத்துடன், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டமும் இந்தமுறை நடைபெறவில்லை. மேலும், இரு அவைகளும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு, ஊரடங்கால் தொழிலாளர்கள் பாதிப்பு, சீன ஊடுருவல், பொருளாதாரச் சரிவு, மைனசில் போகும் உள்நாட்டு உற்பத்தி விகிதம் போன்ற பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த தொடரில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்தாலும், சமூக இடைவெளி உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அமளிதுமளி ஏற்பட வாய்ப்பு இருக்காது எனத் தெரிகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுல்காந்தியும் செல்வதால், இருவரும் அவைக்கு வரப் போவதில்லை.