நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை

பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் உள்ள தனது வீட்டில் இருந்து கொச்சிக்கு இரவில் காரில் சென்று கொண்டிருந்தார். கொச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது வேனில் வந்த ஒரு கும்பல் அவரது காரை வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி வேனில் ஏற்றியது. தொடர்ந்து அந்த கும்பல் வேனில் வைத்து நடிகையை கொடூரமாக பலாத்காரம் செய்தது.

கொச்சி நகரின் மையப்பகுதியில் வைத்து பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவிலும் இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த நடிகையிடம் சில வருடங்களுக்கு முன் டிரைவராக இருந்த சுனில்குமார் என்பவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சதியில் பிரபல நடிகர் திலீப்புக்கும் பங்கு இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடிகர் திலீப்பை கைது செய்தனர். நடிகை பலாத்கார வழக்கில் மலையாள முன்னணி நடிகர் கைது செய்யப்பட்டது மலையாள திரை உலகிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியரை திலீப் திருமணம் செய்திருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். நடிகை காவ்யா மாதவனுடன் திலீப்புக்கு நெருக்கம் இருந்தது. இதுகுறித்து பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை மஞ்சு வாரியரிடம் கூறினார். இதனால் தான் நடிகர் திலீப்புக்கும் மஞ்சு வாரியருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தனக்கும் மஞ்சு வாரியருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட பாதிக்கப்பட்ட அந்த நடிகை தான் காரணம் என திலீப்புக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் தான் அவர் கூலிப்படையை வைத்து அந்த நடிகையை பலாத்காரம் செய்ய திட்டம் தீட்டினார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் வழக்கு விசாரணையின்போது நடிகர் திலீப்புக்கும் முக்கிய குற்றவாளியான சுனில்குமாருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தனக்கும் சுனில்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் திலீப் கூறினார்.

திலீப் பொய் சொல்வதாகவும், அவருக்கும், சுனில்குமாருக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க முக்கிய சாட்சி ஒருவர் இருப்பதாகவும், அந்த சாட்சியை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸ் கூறிய அந்த சாட்சியை ஒரு வழக்கறிஞர் மூலம் திலீப் கலைக்க முயன்றதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். திலீப்புக்கு எதிரான சாட்சியை கலைக்க முயன்றதாக கூறப்படும் வழக்கறிஞரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்பிறகு திலீப்பின் ஜாமீனை ரத்து செய்வது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என தெரிகிறது

More News >>