ஏழு ஆண்டுகால தடை முடிவுக்கு வந்தது விளையாட தயாராகிறார் ஸ்ரீசாந்த்

கிரிக்கெட் சூதாட்ட புகாரை தொடர்ந்து ஏழு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் முடிவடைந்தது.

இந்திய கிரிக்கெட் அணியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் கலந்து கொண்டதாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீசாந்துக்கு 7 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து அவரால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஏழு ஆண்டு காலத் தடை முடிவடைந்தது. இதையடுத்து அவர் மீண்டும் களம் இறங்க தீர்மானித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: இந்த நல்ல நாளுக்காகத் தான் நான் கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருந்தேன்.

இன்று முதல் நான் சுதந்திர மனிதனாகி விட்டேன். கூட்டிலிருந்து திறந்துவிடப்பட்ட ஒரு பறவை போல நான் உணர்கிறேன். கொரோனா பரவல் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் விளையாட்டில் இருந்து ஒதுங்கி விடலாமா என்று கூட நான் ஒரு கட்டத்தில் ஆலோசித்தேன். ஆனால் இவ்வளவு நாள் காத்திருந்து விட்டு இப்போது அதை செய்வது முறையல்ல என்று தோன்றியது. எனவே தான் மீண்டும் விளையாட தீர்மானித்தேன். உள்ளூர் போட்டிகளில் தற்போதைய சூழ்நிலையில் விளையாட முடியாவிட்டால் வெளிநாட்டுக்கு சென்று விளையாட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கோரி உள்ளேன். அனுமதி கிடைத்தால் நான் வெளிநாடு சென்று விளையாட முடிவு செய்துள்ளேன் என்று உற்சாகத்துடன் கூறினார் 37 வயதான ஸ்ரீசாந்த்.

More News >>