நீட் தேர்வு ரத்து கோரி நாடாளுமன்றத்தில் திமுக ஆர்ப்பாட்டம்.. டி.ஆர்.பாலு பேச்சு..
தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சலில் 12 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேசினார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொல்லாதே கொல்லாதே மாணவர்களை கொல்லாதே... என்பது உள்பட பல கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, மக்களவையில் நீட் தேர்வு பிரச்னையை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பினார். அவர் பேசியதாவது:
நீட் தேர்வின் காரணமாக தமிழகத்தில் 12 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட அவல நிலை குறித்து மக்களவையின் கவனத்தையும், அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறேன். தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் மூலமாக பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டியுள்ளது. நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.
பிளஸ் 2 முடித்து மாணவர்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் நீட்தேர்வு எழுத வேண்டும். மாநில பாடத்திட்டமும், சிபிஎஸ்இ பாடத்திட்டமும் வெவ்வேறாக இருப்பதால் அவர்களால் எப்படி குறுகிய காலத்திற்குள் படிக்க முடியும்? இந்த விஷயத்தில் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காததால் அவர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்கிறார்கள், இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது. தமிழகத்திற்கு இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.
இதையும் பாருங்க: பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு பலவீனமா ?