சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி வெளிநாட்டு பணம் சிக்கியது
சென்னையில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ.1.34 கோடி வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமான நிலையத்தின் வழியாக வெளிநாட்டு பணம் கடத்த உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த சையத் துராபுதீன் என்பவரின் பெட்டியில் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததை அடுத்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சவுதி நாட்டின் ரியால், குவைத் நாட்டின் தினார் உள்பட பல வெளிநாட்டு பணம் அதில் இருந்தது தெரியவந்தது. மேலும், இதன் மொத்த மதிப்பு ரூ.1.34 கோடியே ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, சையத் துராபுதீனை கைது செய்த அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com