பத்ம விருதுக்காக தமிழகம் பரிந்துரைத்த 6 பேரையும் நிராகரித்த மத்திய அரசு!

பத்ம விருதுகளுக்காக தமிழக அரசு பரிந்துரைத்த 6 பேரின் பெயர்களையும் மத்திய அரசு நியமித்த குழுவினர் நிராகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “2018 ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்காக நாட்டில் உள்ள மாநில அரசுகள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் என 35 ஆயிரத்து 595 பேரை பரிந்துரை செய்திருந்தன. இந்த விருதுக்கு தகுதியான 84 பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஜனவரி 25 ஆம்தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு தகுதியானவர்களை உள்துறை அமைச்சகத்தின் 19 பேர் கொண்ட சிறப்பு குழு தேர்வு செய்தது.

இந்த விருதுகளை மார்ச் 20 ஆம் தேதியும், ஏப்ரல் 2 ஆம் தேதியும் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். பத்ம விருதுக்கு பல்வேறு மாநிலங்கள் சார்பில் சிறந்தவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இதில் தமிழகம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட், பீகார், ராஜஸ்தான், தில்லி மாநில அரசுகள் பரிந்துரைத்த யாவரின் பெயரும் ஏற்கப்படவில்லை, அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதில் தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரின் பெயர்களும் நிராகரிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>