யாரும் நம்பவேண்டாம் - சபரிமலைக் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு..!
சபரிமலையில் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், பத்திரிகை மற்றும் சமூக இணையதளங்களில் வரும் தகவல்களை நம்பவேண்டாம் என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.கொரோனா தாக்கத்தை தொடர்ந்து கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்ல. ஆனால் கோவிலில் வழக்கம் போல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வருடந்தோறும்10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா இவ்வருடம் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைகளை முன்னிட்டு பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசிப்பதற்காக திருவனந்தபுரத்தில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மண்டல காலம் முதல் பக்தர்கள்அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. நிபந்தனைகளுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களை மட்டுமே அனுமதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மட்டும் தான் எடுக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.இந்நிலையில் மண்டல கால பூஜைகளில் தமிழ்நாடு உட்பட வெளிமாநில பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவக் குழு கேரள அரசிடம் பரிந்துரைத்திருப்பதாக சில பத்திரிகைகள் மற்றும் சமூக இணையதளங்களில் செய்தி வெளியானது. ஆனால் இதை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்துள்ளது.இது தொடர்பாக தேவசம் போர்டு தலைவர் வாசு கூறுகையில், சபரிமலையில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் வெளிமாநில பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி சமூக இணையதளங்களிலும், ஒரு தமிழ் பத்திரிகையிலும் செய்தி வெளியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறினார்.