ஆற்றுக்குள் வந்த திமிங்கலம்: முதலைகளுக்கு இரையாகுமா?
வழி தவறிய திமிங்கலம் ஆஸ்திரேலியாவில் ஆற்றுக்குள் வந்துள்ளது. அப்பகுதிக்கு படகில் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திமிங்கலம் உயிருடன் கடலுக்குள் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்டார்டிகாவுக்கு செல்லும் வழியில் தவறாக திரும்பியதன் காரணமாக ஹம்ப்பேக் என்னும் கூனல் வகை திமிங்கலம் ஒன்று ஆஸ்திரேலியாவின் பெரிய தேசிய பூங்காவான காகாடு தேசிய பூங்கா எல்லைக்குள் வந்துள்ளது. இந்தத் திமிங்கலம் 52 அடி நீளம் கொண்டது.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஈஸ்ட் அலிகேட்டர் நதியருகே மூன்று கூனல் திமிங்கலங்கள் காணப்பட்டன. இரண்டு திமிங்கலங்கள் திரும்பவும் தங்கள் வழியே சென்றுவிட்டன. ஒன்று மட்டும் நதிக்குள் 18 மைல் தூரம் வந்துள்ளது. அலிகேட்டர் நதி என்று கூறப்பட்டாலும் இதில் தற்போது முதலைகள் இல்லை.
ஆனால் காகாடா தேசிய பூங்கா உப்புநீர் முதலைகள் வரக்கூடிய அபாய பகுதியாகும். இங்கு வரும் பார்வையாளர்கள் முதலைகளை குறித்து எச்சரிக்கப்படுவதுண்டு. ஆனால், திமிங்கலம் தற்போது ஆரோக்கியமாக இருப்பதால் முதலைகள் அதை தாக்கக்கூடிய வாய்ப்பில்லை என்றும், திமிங்கலம் உடல்நலிவுற்றால் முதலைகள் தாக்கக்கூடும் என்றும் கடல் சூழலியல் விஞ்ஞானி கரோல் பால்மெர் கருத்து தெரிவித்துள்ளார்.
காகாடா தேசிய பூங்காவில் வசிப்பவர்கள், இப்பகுதியில் திமிங்கலங்கள் இதுவரை வந்ததேயில்லை என்று கூறியுள்ளனர். ஒலி எழுப்பி திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.