கமல்ஹாசன் மகள் நடிக்கும் பட போஸ்டரை வெளியிட்ட பிரபல நடிகர்..
உலகநாயகன் கமல்ஹாசன் 2வது மகள் நடிகை அக்ஷரா ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதுபற்றி பட இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்துக் கூறியதாவது:எங்கள் படத்தின் “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு” தலைப்பை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்களுக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. நாங்கள் கேட்டுக்கொண்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல், மிக இயல்பாக எங்கள் படத்தலைப்பை வெளியிட்டு தந்த விஜய் சேதுபதியின் எளிமையான பண்பு, எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு எங்கள் மனம் கனிந்த நன்றி.
சமூகத்தைப் பொறுத்தவரை “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு “ எனும் நான்கு பண்பும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதியாகக் கருதப்படுகிறது. எங்கள் படம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது. இதைத்தாண்டி கதைதளம் பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்கும் போது அதை அறிந்துகொண்டால் தான் அது சுவாரஸ்ய மாக இருக்கும்/இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய டிஜிட்டல் தளத்தில், தங்களது தரமான தயாரிப்புகள் மூலம் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது ட்ரெண்ட் லவுட் (Trend Loud ). தற்போது அடுத்த கட்ட வளர்ச்சியாகத் திரைப்படத் துறையில் கால் பதித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது. அக்ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல பாடகி உஷா உதுப் அவருக்குப் பாட்டியாக நடிக்கிறார். பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு: ஷ்ரேயா தேவ் ட்யூப். படத்தொகுப்பு: கீர்த்தனா முரளி. தயாரிப்பு வடிவமைப்ப: ஷஹானு முரளிதரன். உடை வடிவமைப்பு : தீமிஸ் வனேஷா . ஒலி வடிவமைப்பு: எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி. பாடல்கள் : மதன் கார்கி. இசை: சுஷா.