நடிகர் திலீப் ஜாமீன் ரத்தாகுமா? 18ம் தேதி தெரியும்

நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியைக் கலைக்க முயன்றாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக 18ம் தேதி நீதிமன்றம் முடிவெடுக்கும்.கடந்த 3 வருடங்களுக்கு முன் கொச்சியில் வைத்து ஒரு பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையின் முன்னாள் டிரைவர் சுனில்குமார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல நடிகர் திலீப்புக்கும் இதில் பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்பன உள்பட நிபந்தனைகள் இவருக்கு விதிக்கப்பட்டன.

இந்நிலையில் திலீப்புக்கும், முக்கிய குற்றவாளியான சுனில்குமாருக்கும் ஏற்கனவே தொடர்பு உண்டு என்பதை நிரூபிப்பதற்காக ஒரு சாட்சியை போலீஸ் தரப்பில் தயார் படுத்தப்படுத்தியிருந்தனர். அந்த சாட்சியை ஒரு வழக்கறிஞர் மூலம் திலீப் கலைக்க முயற்சித்ததாக விசாரணை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் கொச்சி நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் விசாரணையை 18ம் தேதிக்குத் தள்ளி வைத்தது. இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில்குமார் பிரபல நடிகர் முகேஷிடமும் டிரைவராக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து முகேஷிடமும் இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நடிகர் திலீப்பும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடமும் விசாரணை நடந்தது.

More News >>