டெல்லி அரசு பள்ளிகளின் சாதனை.... 500 மாணவர்கள் JEE தேர்வில் தேர்ச்சி!
ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மைய நிதியளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் (சி.எஃப்.டி.ஐ) ஆகியவற்றில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக ஜே.இ.இ-மெயின்ஸ் தேர்வு, இந்த மாத தொடக்கத்தில் நடந்தது. COVID-19 தொற்று காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இந்த மாத தொடக்கத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவு வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதில் டெல்லி அரசுப் பள்ளிகளில், படித்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு JEE-Mains தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், டெல்லியைச் சேர்ந்த, ஐந்து மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, மாணவர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில், ``டெல்லி அரசுப் பள்ளிகளில் பயின்ற 510 மாணவர்கள் இந்த ஆண்டு JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். JEE தேர்வுகளில் கடந்த 3 ஆண்டுகளில் டெல்லி அரசுப் பள்ளிகளில் தகுதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை முறையே, 2020- 510, 2019- 473, 2018- 350. ஒவ்வொரு மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். டெல்லி அரசுப் பள்ளிகளின் மற்றொரு மிகப் பெரிய சாதனை இது" என நெகிழ்ந்து கூறியுள்ளார்.