வீட்டிலிருந்தே இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்!
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவும் இறுதி செமஸ்டர் தேர்வைக் கட்டாயம் நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளில் தமிழக பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை வீட்டில் இருந்து ஆன்லைனில் எழுதலாம் என்றும், இணையவசதி இல்லாதவர்கள் விடைத்தாள்களைத் தபாலில் அனுப்பலாம் எனவும் சென்னை பல்கலைக்கழகம் முதலில் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் மாணவர்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளன.
மேலும் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே மாணவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வினாத்தாள் அனுப்பப்படும் என்றும், தேர்வுகளைப் பேனா பேப்பர் கொண்டு எழுதி அதன்பின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பல்கலைக்கழக இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும், இணைய வசதி இல்லாத மாணவர்கள் ஸ்பீட் போஸ்ட் (Speed post) தபாலில் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.