இம்மாத இறுதியில் சசிகலா விடுதலை.. அடித்துக் கூறும் ராஜா செந்தூர்பாண்டியன்!

சசிகலாவின் தண்டனைக் காலம் 2021ம் ஆண்டு துவக்கத்தில் முடிவடைகிறது. இதற்கிடையே, நன்னடத்தை விதிகளின்படி அவருக்குத் தண்டனை குறைக்கப்படுவதாகவும், இன்னும் சில மாதங்களில் அவர் வெளியே வருவார் என்றும் அவ்வப்போது செய்திகள் உலா வந்தன. பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ட்விட் போட்டார். அதில், ஆக.14ம் தேதியன்று சசிகலா விடுதலை ஆகப் போகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பரபரப்பு ஏற்பட்டு, கடைசியில் அது பொய்யாகிப் போனது. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் ஒரு விளக்கம் அளித்திருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார்.

அதற்குச் சிறையின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் லதா அளித்த பதிலில், சசிகலா தண்டனைக் காலத்தின்படி 2021ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தைச் செலுத்தாவிட்டால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். மேலும், அவர் பரோலில் சென்ற காலத்தையும் கணக்கிட்டு விடுதலை தேதி மாறலாம். தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகுதான் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்குள் சசிகலா வெளியில் வருவார் என்கிறார் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன். இதுதொடர்பாக அவர் ஊடகத்திடம் பேசுகையில், ``தண்டனைக் காலத்தின் படி பார்த்தால் அடுத்த ஆண்டு பிப்.14இல் சசிகலா விடுதலை செய்யப்படவேண்டும். 17 நாட்கள் மட்டுமே சசிகலா பரோலில் வெளியே வந்திருக்கிறார். மொத்தம் 35 பரோல் நாட்கள் என்பதால் மீதம் 18 நாட்கள் உள்ளன. அந்த 18 நாள்களை பிப்.14 இல் இருந்து கழித்தால் ஜன.27ல் சட்டப்படி விடுதலை. இதனைத்தான் பெங்களூரு சிறை நிர்வாகம் ஆர்டிஐயில் சொல்லியுள்ளது. ஆனால் ஆனால் நன்னடத்தை விதிகளின் படி இம்மாத இறுதியிலேயே கண்டிப்பாக சசிகலா வெளியே வருவார்" என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

More News >>