லாரியில் போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய தகவல், கிடைத்தது என்ன தெரியுமா?

தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற லாரியில் போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து பாலக்காட்டில் கலால் துறையினர் நடத்திய சோதனையில் 2 கோடி ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டது ஏற்படுத்தியது.

தமிழகத்தில் இருந்து பாலக்காடு வழியாக கேரளா செல்லும் ஒரு லாரியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக பாலக்காடு கலால்துறை அமலாக்கப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அனிகுமாரின் தலைமையில் அதிகாரிகள் இன்று கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சரக்கு லாரி அந்த வழியாக வந்தது. அந்த லாரியை நிறுத்திய அதிகாரிகள் லாரியில் என்ன இருக்கிறது என டிரைவரிடம் கேட்டனர். அதற்கு அந்த டிரைவர், கோவையிலிருந்து கோழிக்கோட்டுக்கு அரிசி கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.ஆனாலும் சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை பரிசோதிக்க கலால் துறையினர் தீர்மானித்தனர். லாரியில் ஏறி பார்த்த போது முழுவதும் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன்பிறகும் அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை. அரிசி மூட்டைகள் அனைத்தையும் கீழே இறக்கி பரிசோதிக்க தீர்மானித்தனர். இதன்படி அரிசி மூட்டைகளை அதிகாரிகளே சுமந்து கீழே இறக்கினர்.

அனைத்து மூட்டைகளையும் இறக்கிப் பார்த்தபோது லாரியில் ஒரு ரகசிய அறை இருந்தது தெரியவந்தது. அதில் தான் போதைப் பொருள் இருக்கும் என கருதி அந்த ரகசிய அறையை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். ஆனால் போதைப் பொருளுக்குப் பதிலாக கட்டுக் கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதை எண்ணிப் பார்த்தபோது ₹2 கோடி பணம் இருந்தது. விசாரணையில் அது ஹவாலா பணம் என தெரியவந்தது. லாரி டிரைவரையும், கைப்பற்றப்பட்ட பணத்தையும் கலால் துறையினர் பாலக்காடு போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

More News >>