திருவள்ளுவர் பல்கலைக்கழகம். 2 ஆக பிரிக்கப்படும்.. முதல்வருக்கு துரைமுருகன் எதிர்ப்பு..
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆகப் பிரிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆகப் பிரிக்கப்படும். விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். கேள்விநேரத்தின் போது அவர் பேசுகையில், கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிக்கிறீர்களா? அந்த பல்கலைக்கழகம் எனது காட்பாடி தொகுதியில் இருக்கிறது. ஏற்கனவே அந்த பல்கலைக்கழகத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. ஒன்றுமே இல்லாத அந்த பல்கலைக்கழகத்தையும் பிரிப்பது சரியான முடிவு அல்ல. எனது தொகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் முன்பாக என்னிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டும் என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்களுக்காக இந்த பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஒன்றும் கிடையாது. கல்வி வசதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.