காலில் மாலையாக விழுகிறேன் அண்ணனைக் காப்பாற்று - நடராஜனுக்காக உருகும் நாஞ்சில் சம்பத்
காலமகளே! உன் காலில் மாலையாக விழுகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று என்று நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதற்கு நாஞ்சில் சம்பத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் வாழ்க்கையில் முதலில் மதிமுகவில் இருந்தார் நாஞ்சில் சம்பத். பின்னர், அதில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அப்போது, கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியுடன் இன்னோவோ கார் ஒன்றையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா தலைமை என வந்தபோது முதலில் சம்பத் ஏற்கவில்லை. கட்சியில் இருந்து விலகப்போவதாகவும், காரை அதிமுகவிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதன் மறுநாளே சம்பத் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். காரை ஒப்படைக்கவில்லை.
தற்போது, கட்சியில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கைகோர்த்துள்ளதால், நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.
இதற்கிடையில், கடந்த 15ஆம் தேதி டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் பெயரின் திராவிடம் இல்லை என்று கூறி, கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கட்சியில் இருந்து விலகுவதாகவும், அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜ உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாஞ்சில் சம்பத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தேளாகக் கொட்டியது ஒரு செய்தி. முந்துதமிழ் காக்க முந்திவந்தவன், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்டவன், தமிழ் ஈழ தாகம் கொண்டவன், தன்மானமுள்ள அண்ணன் ம.நடராஜன் கவலைக்கிடம்.கவலை என்னை கொத்தித் தின்னுகிறது. காலமகளே! உன் காலில் மாலையாக விழுகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com