குரூப் போட்டோவில் பாக். வீரர்களை மறைக்க கங்குலி என்ன செய்தார் தெரியுமா?
சார்ஜாவில் எடுத்த குரூப் போட்டோவில் தற்செயலாகப் பதிந்த பாகிஸ்தான் வீரர்களின் கட் அவுட்டை மறைத்து கங்குலி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வைத்து நடைபெறுகிறது. சார்ஜா உள்பட 3 ஸ்டேடியங்களில் போட்டி நடைபெற உள்ளது. வரும் 19ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே முதல் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி ஐபிஎல் போட்டி நடைபெறும் கிரிக்கெட் மைதானங்களை பார்வையிடுவதற்காகக் கடந்த வாரம் துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா, தலைமை நிர்வாக அதிகாரி ஹேமங் அமீன் ஆகியோரும் சென்றிருந்தனர்.கொரோனா நிபந்தனைகளின் படி ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்பவர்கள் ஒரு வாரம் தனிமையில் இருந்த பின்னரே வெளியே செல்ல முடியும்.
இதன்படி ஒருவார தனிமையில் இருந்த பின்னர் நேற்று கங்குலி சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தை பார்வையிடச் சென்றார். அப்போது அவர் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஒரு குரூப் போட்டோ எடுத்தார். அந்த ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களின் ஒரு கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. கங்குலி எடுத்த அந்த குரூப் போட்டோவில் தற்செயலாகப் பாகிஸ்தான் வீரர்களின் கட் அவுட்டும் பதிந்தது. அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் கங்குலி இன்று வெளியிட்டார். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றிருந்த அந்த கட் அவுட் மங்கலாக தெரியும் வகையில் போட்டோஷாப் செய்து அந்த படத்தை கங்குலி வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் வீரர்களை மறைப்பதற்காகவே கங்குலி இதைச் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.