போதைப் பொருள் கடத்த வாலிபர்களின் புதிய டெக்னிக்
பைக்கில் பின் சீட்டில் இளம்பெண் இருந்தால் போலீஸ் சோதனையில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி போதைப் பொருளைக் கடத்தி வந்த 2 பேர் கேரளாவில் பிடிபட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தி என்ற இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ₹10 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளுடன் ஒரு வாலிபரைக் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் தான் போதைப் பொருளைக் கடத்துவதற்கு தற்போது வாலிபர்கள் மேற்கொண்டு வரும் ஒரு புதிய டெக்னிக் குறித்து போலீசாருக்கு தெரியவந்தது.
இதற்கு அசுர வேகத்தில் பாயும் பைக், ஹெல்மெட், இளம்பெண் கிடைத்தால் போதும். பைக்கின் பின்சீட்டில் இளம்பெண்ணை உட்காரவைத்து ஹெல்மெட் போட்டு விட்டு ரோட்டில் சென்றால் எந்த போலீசும் தடுத்து நிறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் ஹெல்மெட் போடுவது தலையைப் பாதுகாக்க என நினைத்துவிட வேண்டாம். அதனுள் போதைப் பொருளைப் எளிதில் மறைத்து வைக்கலாம்.அதற்காகத்தான் இவர்கள் ஹெல்மெட்டை பயன்படுத்துகின்றனர் .
இந்த டெக்னிக்கை பயன்படுத்தி கேரளா முழுவதும் பல இளைஞர்கள் போதைப் பொருளைக் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து பைக்கில் இளம்பெண்களுடன் செல்லும் வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் சவுரவ், அலன் என்ற இரண்டு வாலிபர்கள் சிக்கினர். இவர்கள் ஹெல்மெட்டில் மறைத்து வைத்திருந்த 15₹ லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பின் அவர்களைச் சிறையில் அடைத்தனர். இனி கேரளா முழுவதும் இந்த சோதனை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.